திருமணம் ஏக்கத்தில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர்.. திண்டிவனம் அருகே சோகம்
திண்டிவனம் அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மேல்மாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியாழ்வார். இவரது மகன் ராஜசேகர் (28). பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தனக்கு திருமணம் செய்து வைக்க சொல்லி தொடர்ந்து பெற்றோரை அவர் வலியுறுத்தி வந்ததாகவும் தெரிகிறது. ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் யாரும் பெண் தர மாட்டார்கள் என பெற்றோர் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ராஜசேகர், இன்று தனது வீட்டிற்கு பின்னால் உள்ள வாழை தோப்பில் கத்தியால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெள்ளிமேடுபேட்டை போலீசார் ராஜசேகர் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.