போதையில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளம்பெண் பலி.. அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த பரிதாபம்!
பண்ணை வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மதுபோதையில் இளம்பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா நகர் காசன்வியு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் அனுசத்யா(31). இவரது தாய் பிரேமாவிற்கு நேற்று பிறந்த நாள் என்பதால் கானாத்தூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் குடும்பத்துடன் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியுள்ளனர். மேலும் பிறந்த நாள் கொண்டாடத்தில் மது விருந்து அளித்ததாக கூறப்படுகிறது.
அப்போது அனுசத்யா(31), அவரது தோழி சைலஜா(29) இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் மதுபோதையில் இருவரும் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும் திடீரென இருவரும் நீரில் மூழ்கினர். இதனைப் பார்த்து பதறிப்போன அனுசத்யாவின் தாய் பிரேமா கூச்சலிட்டார்.
அவரது சத்தம் கேட்டு அங்கு பணியில் இருந்த காவலாளி விஜய் ஓடிவந்து நீச்சல் குளத்தில் குதித்து அனுசத்யா, சைலஜா இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அனுசத்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சைலஜாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பின்னர் பிரேமா அளித்த புகாரின் பேரில் கானாத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று பண்ணை வீட்டு காவலாளி மற்றும் அனுசத்யா பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பண்ணை வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மதுபோதையில் இளம்பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.