குடும்ப தகராறில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை.. கணவர் விஷம் குடித்து பலி.. நெல்லையில் பரபரப்பு

 

நெல்லை அருகே காதல் திருமணம் செய்த தம்பதி, குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி ராஜா தெருவில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரது மகன் பிரபு என்ற பிரபாகரன் (24). தூத்துக்குடியை சேர்ந்தவர் ரூஸ்டால். இவரது மகள் புனிதா (18). இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் அண்ணன் - தங்கை உறவு முறை என கூறப்படுகிறது. எனவே, இவர்களது திருமணத்திற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திசையன்விளை அருகே உள்ள எருமைகுளம் பகுதியில் காதல் தம்பதியினர் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். பிரபாகரன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் அவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு கணவன் - மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரபாகரன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த பிரபாகரன், அங்கு புனிதா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கதறி அழுத பிரபாகரன் துக்கம் தாங்காமல் மதுபாட்டிலை எடுத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகே சென்றார். அங்கு மதுவில் விஷம் கலந்து குடித்தார். இதில் அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்னதாக பிரபாகரன் தனது அண்ணனுக்கு போன் செய்து, நடந்த சம்பவத்தை கூறிவிட்டு தானும் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த வழியாக சென்ற பொதுமக்கள், சுடுகாடு அருகே ஒருவர் பிணமாக கிடப்பது பற்றி திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து புனிதாவின் உடலையும் கைப்பற்றி அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.