டிடிஎஃப் வாசன் பைக்கை எரிக்கனும்.. யூடியூப் பக்கத்தை மூடனும்.? உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி!

 

ஜாமீன் கோரி டிடிஎஃப் வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 2கே கிட்ஸ்கள் மத்தியில் சமீபத்தில் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் யூடியூபில் ட்வின் த்ராட்லர்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சிறுவர்களை கவர்ந்து வரும் டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறிய புகாரின் பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.

பாதுகாப்பான முறையில் வாசன் பைக்கை ஓட்டினாலும் அவர் 2கே கிட்ஸ்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. விமர்சனங்களைத் தாண்டி டிடிஎஃப் வாசனை யூடியிபில் சப்ஸ்கிரைப் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் 17-ம் தேதி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சி அருகே தனது பைக்கில் வாசன் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற பைக் விபத்தில் சிக்கி பெரும் சேதத்திற்குள்ளானது. அவருடைய பைக் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் சிக்கினாலும் வாசன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அவர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் மீது பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இவரை கைது செய்த காஞ்சிபுரம் போலீசார் இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 இல் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “சாலையில் மிதமாக வந்த நிலையில் கால்நடைகள் குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டது. காயங்கள் அதிகமாக இருப்பதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதியளிக்க வேண்டும். எந்தவித குற்றத்திலும் ஈடுபடவில்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைக்கு கட்டுப்படுவேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில், “வாசனை யூடியூபில் 45 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். அவருக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான பைக் உள்ளது. அவர் அணியும் பாதுகாக்கும் கவசங்கள் ரூ.2 முதல் ரூ.3 லட்சம் மதிப்புடையது. இந்த விபத்தில் அவர் உயிர் தப்பிருக்கலாம். ஆனால் மற்ற இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பைக் கேட்பார்கள். இதுபோன்று ஒரு சிலர் அபாயகரமான சாகசத்தில் ஈடுபட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து விளம்பரத்திற்காகவும் மற்ற இளைஞர்களை தவறான வழியில் செயல்பட வாசன் தூண்டுவதால் தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என்றும் ஜாமீன் வேண்டுமென்றால் பைக்கை எரித்துவிட்டு யூடியூப் சேனலை முடக்கிவிட்டு நீதிமன்றத்தை நாடலாம் என்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.