தீபாவளிக்கு டாஸ்மாக்கில் விற்பனை படு ஜோர்.. கடந்த 2 நாட்களில் ரூ. 467 கோடி வசூல்!
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.467.63 கோடிக்கு மது விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.
தற்போது, 5,425 டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. தினந்தோறும் சராசரியாக ரூ.100 கோடி மதிப்பிலான சரக்கு வகைகள் விற்பனையாவதாக கூறப்படுகிறது. அதேபோல், பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல் வார விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.467.63 கோடிக்கு மது விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நேற்று நவம்பர் 12-ம் தேதி திருச்சி - ரூ.55.60 கோடி, சென்னை - ரூ.52.98 கோடி, மதுரை - ரூ.51.97 கோடி, சேலம் - ரூ.46.62 கோடி, கோவை - ரூ.39.61 கோடி என மொத்தமாக 246.78 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
நேற்று முன்தினம் நவம்பர் 11-ம் தேதி மதுரை-ரூ.52.73 கோடி, சென்னை-ரூ.48.12 கோடி, கோவை-ரூ.40.20 கோடி, திருச்சி-ரூ.40.02 கோடி, சேலம்-ரூ.39.78 கோடிக்கு என மொத்தமாக 220.85 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் 464.21 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.