இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு பாராட்டுவிழா! முதலமைச்சர் அறிவிப்பு!!

 

இசைத்துறையில் 50 ஆண்டுகள் சாதனை படைத்துள்ள, இசைஞானி இளையராஜாவுக்கு அரசு தரப்பில் பாராட்டு விழா நடத்தப்படும். இளையராஜாவின் இசை ரசிகர்களும் பங்கேற்கும் வகையில் அது இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிம்பொனி  இசை நிகழ்ச்சியை முடித்து விட்டு சென்னை திரும்பிய இசைஞானி இளையராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். லண்டன் செல்வதற்கு முன்னதாக இளையராஜாவை சந்தித்து நேரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதற்கு நன்றி செலுத்துவதற்காக முதலமைச்சரின் வீட்டுக்கு வந்திருந்தார் இளையராஜா.

இந்த சந்திப்பின் போது இளையராஜாவின் 50  ஆண்டுகால இசைப்பயணத்தைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு விழா நடத்த இருப்பதைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர்,

”இலண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா அவர்கள், அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்! ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!” என்று கூறியுள்ளார்.