17 நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம்.. எப்போது தெரியுமா?
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக, வரும் 27-ம் தேதி அன்று அமெரிக்கா செல்கிறார்.
தமிழ்நாட்டை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அதற்கான முயற்சிகளில் அமைச்சர்கள், அதிகாரிகளை ஈடுபடுத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடந்த 3 ஆண்டுகளில் துபாய், அபுதாபி, லண்டன், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குச் சென்று, முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் இந்த முதலீட்டாளர்கள் ஈர்ப்பு பயண வரிசையில் அடுத்ததாக அமெரிக்கா செல்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் 27-ம் தேதி அமெரிக்கா சென்று அங்கே தங்கியிருந்து முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார். இதற்காக ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து முதல்வரின் பயணத் திட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பயணத்தின் போது சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ நகரங்களில் உலகின் முன்னணி நிறுவன தலைவர்களை சந்தித்து பேசுகிறார். ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரையில் சான் பிரான்சிஸ்கோ நகரில் முன்னணி நிறுவன தலைவர்களை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வரின் இந்த பயணத்தில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
அமெரிக்கா செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவன உரிமையாளர் பில் கேட்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரிகளையும் அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 29-ம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டார்கள் மாநாட்டில் பேச உள்ளார். ஆகஸ்ட் 31-ம் தேதி அமெரி்க்காவில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் இந்த பயணத்தில் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்வரின் செயலாளர்கள், தொழில் துறை செயலாளர் மற்றும் பல்வேறு உயரதிகாரிகள் உடன் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.