ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!!
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்று UGC வெளியிட்டுள்ள புதிய விதிகளின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதை எதிர்த்து அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
”ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி விதிகள் திருப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பல்கலைக்கழக மானியக்குழு விதிகளில் கொண்டு வரும் திருத்தம் மாநில உரிமைகள் மீதான நேரடி தக்குதலாகும். பொதுப்பட்டியலில் உள்ள கல்வியில் ஒன்றிய அரசு தன்னிச்சையாக யுஜிசி விதிகளை மாற்ற நினைப்பது அரசியல் சட்டத்திற்கே எதிரானது.
தமிழ்நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களில் தன்னாட்சி உரிமையை பறிப்பதை வாய்மூடி பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை முடக்க நினைப்பது சர்வாதிகாரமே தவிர வேறொன்றும் இல்லை” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.