தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் திடீர் ராஜினாமா.. ஆர்.சண்முகசுந்தரம் முடிவு ஏன்?
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பணியை திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்தவுடன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர் ஆர்.சண்முகசுந்தரம். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் இரண்டரை ஆண்டுகளாக அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்து வந்த நிலையில் தற்போது ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஆர்.சண்முகசுந்தரம் ராஜினாமா முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துவிட்டதாகவும், ஆனால், முதல்வர் ஸ்டாலின் தான் சிறிது காலம் தாமதிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு அவர் ராஜினாமா முடிவை அறிவித்து இருக்கிறார். இந்த ராஜினாமா முடிவிற்கான காரணம் என்னவென்று ஆர்.சண்முகசுந்தரத்தின் வெளியில் சொல்லவில்லை.
1989 முதல் 1991-ம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சியின்போது தமிழ்நாடு அரசு குற்றவியல் வழக்கறிஞராகவும் ஆர்.சண்முகசுந்தரம் பணியாற்றி உள்ளார். 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார். கடந்த 2002 முதல் 2008-ம் ஆண்டு வரை இவர் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து இருக்கிறார்.
இவரை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கடந்த 1995-ம் ஆண்டு மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக டான்சி நிலம் அபகரிப்பு வழக்கை தொடர்ந்தவர். இந்த வழக்கை தொடர்ந்ததற்காக வெல்டிங் குமார் மற்றும் ரவுடிகளால் கொலை வெறி தாக்குதலுக்கு அளாகி உயிர் தப்பியவர் சண்முகசுந்தரம்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மிக முக்கிய பொறுப்பான அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட இவர் ராஜினாமாவுக்கு பின்னர் தனிப்பட்ட முறையில் வழக்கறிஞராக செயல்பட உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவரை தொடர்ந்து அடுத்த தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட இருப்பவர் யார் என்ற கேள்வி எழுந்து உள்ளது.