முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!
பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். இவர் கடந்த ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். முதலில் அவரது வீடு, அலுவலகம் மற்றும் நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அதன்பிறகு தான் அவர் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை என்பது கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி நடந்தது.
இந்த கைது நடவடிக்கைக்கு முக்கிய காரணம் அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்காகும். அதாவது கடந்த 2014-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது பணிக்கு அவர் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 20-ம் தேதி அனைத்து தரப்பின் வாதங்களையும் பதிவு செய்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்கள்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு தீர்ப்பு வழங்கியது. செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்திருந்த நிலையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.