கடனுக்காக துணை நடிகரின் மனைவி கடத்தல்.. 2 மாதம் தனி அறையில் அடைத்து வைத்த பாஜக நிர்வாகி.. திருச்சியில் பரபரப்பு

 

திருச்சியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் துணை நடிகரின் மனைவியை அடைத்து வைத்து பாஜக பெண் நிர்வாகி ஒருவர் கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அரியமங்கலம் பால் பண்ணை அருகே உள்ள விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் மதியழகன் (55). இவர் சென்னையில் தங்கி திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வருகிறார். இவரது மனைவி மாலதி (46). இவர்களது மகன் நடராஜ் (20). மதியழகன் மனைவி மாலதி, விஸ்வாஸ் நகர் அருகே உள்ள ஏ.பி.நகரைச் சேர்ந்த உமாராணி (55) என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.

கடந்த சில மாதங்களாக உமாராணி, மாலதியிடம் கொடுத்த கடனை திருப்பி அளிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு மாலதியோ வாய்தா மேல் வாய்தா சொல்லியுள்ளார். இப்படியே போனால் பணம் கிடைக்காது என உமாராணி கருதினார். இதனால் மாலதியை தனது வீட்டிற்கு இழுத்து வந்து அங்கு ஒரு அறையில் அடைத்து வைத்து பணத்தை திருப்பி கொடுத்தால்தான் விடுவேன் என கூறி அவரை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த மதியழகனும், உறவினர்களும், வழக்கறிஞர்களை அழைத்துக் கொண்டு உமாராணியின் வீட்டிற்கு சென்றார். ஆனால் உமா ராணியோ ‘இங்கு மாலதி இல்லை’ என கூறியுள்ளார். ஆனாலும் அவரை மீறி உள்ளே செல்ல முயன்ற நிலையில் அவர்களை உள்ளே வர விடாமல் உமா ராணி தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் துறையினருக்கு மதியழகனும் வழக்கறிஞர்களும் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உமாராணியின் வீட்டில் சோதனையிட சென்றனர். அவர்களிடம் உமாராணி, இங்கு மாலதி இல்லை, தேவையில்லாமல் இவர்கள் பிரச்சினை செய்கிறார்கள் என மதியழகன் மீதே பிளேட்டை திருப்பி போட்டுள்ளார். எனினும் உமாராணி சொல்வதை கேட்காமல் போலீசார் அவரது வீட்டை சோதனையிட்டனர்.

அப்போது ஒரு அறையில் மாலதி அடைத்து வைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மாலதியை போலீசார் மீட்டனர். மாலதியை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக மதியழகன் புகாரின் பேரில் உமா ராணியை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து மாலதி, போலீசாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தார். தன்னை உமா ராணி என்னென்ன கொடுமைகள் செய்தார் என்பது குறித்து கண்ணீர் மல்க மாலதி தெரிவித்தார். இதுகுறித்து உமாராணியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில் மாலதி பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் மாலதிக்கு நெருக்கடி கொடுத்தனர். அதனால் அவரது பாதுகாப்புக்காகவே அவரை என் வீட்டில் தங்க வைத்தேன், நான் அடைத்து வைக்கவில்லை என கூறியிருந்தார். எனினும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாஜக பெண் பிரமுகர் ஒருவர், கடனை வசூலிப்பதற்காக பெண் ஒருவரை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆங்காங்கே வாங்கிய கடனுக்காக பெண்களை அவமானப்படுத்தி பேசுவது, அவர்களை தவறான வழியில் ஈடுபடுத்துவது, குழந்தைகளை பிடித்து வைத்துக் கொள்வது என பல கொடூரங்கள் நடந்து வருகின்றன. எல்லாவற்றுக்கு மேல் கடன் வாங்கியவர்கள், இவர்களுடைய அவமானப்படுத்தக் கூடிய பேச்சை கேட்டுவிட்டு தற்கொலை முடிவுக்கும் செல்கிறார்கள். எனவே இந்த கந்து வட்டி, மீட்டர் வட்டி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.