கனிமொழிக்கு ஆதரவு? திமுகவில் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கிறாரா எடப்பாடி பழனிசாமி?

 

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, திமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

மானாமதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அப்பா, மகன், பேரன் என்ற ஒரே குடும்பத்தின் ஆண் வாரிசுகள் மட்டுமே ஆள வேண்டும் என்ற திமுக-வின் நவீன மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே மக்களின் முடிவு என்று கூறியுள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார். கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என வரிசை போடும் எடப்பாடி பழனிசாமியின் பேச்சில், ‘ஆண் வாரிசுகள் மட்டுமே ஆள வேண்டும்” என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் கனிமொழி எம்.பி. க்கு முதலமைச்சர் வாய்ப்பு தரப்படாது என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டி, கனிமொழிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் சிண்டு முடிய முயற்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

ஆனால் திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு தரப்பட்டாலும், அது அவருக்கான அனுபவத்திற்கான திட்டம் தான் என்றும், தனக்கு அடுத்து கட்சியையும் ஆட்சியையும் யார் சரியான முறையில் வழிநடத்துவார் என்பதை முடிவு செய்து விட்டார் என்றும் கருதப்படுகிறது.

துணைப் பொதுச்செயலாளராக உள்ள கனிமொழிக்கு அண்ணா அறிவாலயத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டு அதை முதலமைச்சர் ஸ்டாலின் தன் கையால் திறந்து வைத்து இருக்கையில் . இருக்கையில் கனிமொழியை அமர வைக்கவும் செய்தார். துரைமுருகனுக்கு அடுத்து கனிமொழி தான் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றே கருதப்படுகிறது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, அண்ணன் தங்கைக்கு இடையே கலகம் மூட்ட முயற்சிக்கும் பாட்சா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனோ அல்ல்து கனிமொழியிடமோ பலிக்காது என்பதே உண்மை.

இதெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா என்ன? அண்மைக் காலத்தில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகளைக் கவனித்துப் பார்த்தால், அவர் சுயமாகச் சிந்தித்து பேசுவதாகத் தெரியவில்லை. யாரோ எழுதிக் கொடுத்ததைத் தான் மேடையில் ஒப்பிவித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது

-ஸ்கார்ப்பியன்