சூப்பர்.. ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் தளர்வுகள்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட தகவல்!

 

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை குறித்த சில அறிவிப்புகள் விரைவில் வெளியாகி வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த திட்டம் அமலுக்கு வந்த நிலையில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதற்கிடையே, இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இதுவரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையை கடந்த 10-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்வு வர இருக்கும் நிலையில், இந்த திட்டத்தில் சில தளர்வுகள் வழங்க இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. அதாவது தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில வாரங்கள் முன்னதாக இத்திட்டத்தில் பயனாளர்களின் தகுதிகளில் சில தளர்வுகளை அறிவித்து மேலும் அதிக பயனாளர்களை இணைக்க அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியுடைய பெரும்பான்மையான மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.