நாளை முதல் பள்ளிகளில் கோடை விடுமுறை!
தமிழ்நாட்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாா்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை பொதுத் தோ்வு நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடா்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு மாணவா்களுக்கு ஆண்டு இறுதித் தோ்வு ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கியது. இந்த தோ்வுகள் ஏப்ரல் 12-ல் முடிக்கப்பட்டு ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டிருந்தது.
இதனிடையே, 4 முதல் 9-ம் வகுப்பு மாணவா்களுக்கு ஏப்ரல் 10, 12 ஆகிய நாள்களில் நடைபெறவிருந்த தோ்வுகள் ரம்ஜான் பண்டிகை காரணமாக, ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் இறுதித் தோ்வுகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன. தொடா்ந்து மாணவா்களுக்கு நாளை (ஏப்ரல் 24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 அல்லது 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது. அந்த வகையில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், ஜூன் 4-ம் தேதி நாடாளுமன்றத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அதன்பிறகே பள்ளிகள் திறப்பு இருக்கும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.