திடீரென உடைந்த பலகை.. ஓடும் அரசு பேருந்து ஓட்டை வழியே கீழே விழுந்த பெண்.. அதிர்ச்சி சம்பம்

 

சென்னையில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட ஓட்டையில் பெண் பயணி சரிந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு நோக்கி மாநகர பேருந்து (தடம் எண் 59) ஒன்று இன்று காலை பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது. அமைந்தகரை ஸ்கைவாக் அருகே வரும் போது பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்காக எழுந்துள்ளார். அப்போது திடீரென பேருந்தின் கீழே உள்ள பலகை உடைந்து ஓட்டை ஏற்பட்டு பெண் பயணியின் கால் முழுவதும் ஓட்டையில் சிக்கி கொண்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் கூச்சலிடவே ஓட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தியுள்ளார். பின்னர் சக பயணிகள் ஓட்டையில் சிக்கிய பெண்ணை பத்திரமாக மீட்டனர். இதில் லேசான காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதனால் ஆத்திரமடைந்த சக பயணிகள் சேதமடைந்த பேருந்தை எதற்காக எடுத்து வந்தீர்கள் என கேட்டு ஓட்டுநர், மற்றும் நடத்துநரிடம் கேள்வி கேட்டு தகராறில் ஈடுபட்டனர். பேருந்து ஓட்டையில் சிக்கி காயமடைந்த பெண் சென்னை மின்ட் பகுதியைச் சேர்ந்த ஷானா என்பதும், இவர் அமைந்தகரை என்.எஸ்.கே நகரில் உள்ள ஒரு பிரின்டிங் பிரஸில் வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது..

இந்த பேருந்து அமைந்தகரை பகுதியில் வெகுநேரமாக நின்றிருந்ததை பார்த்து ரோந்து போலீஸார் விசாரித்த போது, பேருந்து பிரேக் டவுனாகி நின்றதாக பொய் சொல்லி விட்டு பேருந்தை ஊழியர்கள் பணிமனைக்கு எடுத்துச் சென்றனர்.

பின்னர் தகவல் அறிந்து அமைந்தகரை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் மாநகர போக்குவரத்து ஊழியர்கள் காவல் துறைக்கு தகவல் அளிக்காமல் பேருந்தை அங்கிருந்து கொண்டு சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து அண்ணா நகர் போக்குவரத்து போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே ஓடும் பேருந்தில் ஓட்டை விழுந்த இச்சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.