TNPFC அலுவலகத்தில் திடீர் ரெய்டு.. சென்னையில் பரபரப்பு!

 

தமிழ்நாடு அரசின் மின் நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த முறை வருமான வரி சோதனை தனிநபர்கள் தொடர்பாக நடக்கவில்லை. மாறாக  பொதுத்துறை நிறுவனத்திலேயே நடந்திருக்கிறது.

சென்னை நந்தனத்தில் தமிழ்நாடு மின் நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனமான இங்கு, மின்சாரத்துறை உட்கட்டமைப்பை நிர்வகிப்பது, நிதியை துறை சார்ந்த பணிகளுக்கு அளிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணியளவில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடர்ந்தனர். அங்கு, வருமான வரி சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு வருமான வரி அதிகமாக செலுத்திய நிலையில், நடப்பாண்டில் மிகவும் குறைவாக செலுத்திய காரணத்தினால் வருமான வரி சரிபார்ப்பு தொடர்பாக அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக TNPFC சேர்மன் அம்பலவாணன் ஐஏஎஸ்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணை முழுமையாக முடிவடைந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வரி ஏய்ப்பு நடந்திருக்கிறதா என்பது குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிகிறது.