திடீர் மாரடைப்பு.. இளம் சிஆர்பிஎப் வீரர் பலி.. அதிர்ச்சியில் சக வீரர்கள்!

 

சென்னையில் சிஆர்பிஎப் வீரர் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராஜட் கட்டோச் (29). இவர், சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலராக பணியாற்றி வந்தார். மேலும் உடற்பயிற்சி ஆலோசகராகவும் இருந்து வந்தார்.

இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு சீமா தேவி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தற்போது சிஆர்பிஎப் வளாகத்தில் காவலர்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக போலீசார் உடனடியாக அவரை மீட்டு முதலுதவி அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் அதிகளவில் மாரடைப்பால் உயிரிழப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.