தமிழ்நாடு அமைச்சரவையில் திடீர் மாற்றம்... 5 அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றம்!!

 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 ஆண்டு மே7-ம் தேதி பொறுப்பேற்றது. கடந்த ஆண்டில் அமைச்சரவையில் முதன்முதலாக மாற்றம் செய்யப்பட்டது. ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரிடம் இருந்த போக்குவரத்து துறை, எஸ்.எஸ்.சிவசங்கருக்கு மாற்றப்பட்டது.

திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் கடந்த 8-ம் தேதி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததுள்ளது. இந்த சூழலில், கடந்த சில வாரங்களாகவே அமைச்சரவை மாற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கவனித்த நிதி, மனித வள மேலாண்மைத்துறை தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாசரிடமிருந்து பறிக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில்நுட்பத்துறை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தங்கம் தென்னரசு - நிதி, மனிதவள மேம்பாடு
டி.ஆர்.பி.ராஜா - தொழில்துறை
சாமிநாதன் - தமிழ் வளர்ச்சி
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் - தகவல் தொழில்நுட்பம்
மனோ தங்கராஜ் - பால்வளத்துறை