மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மாணவன்.. பந்து எடுக்க சுவர் ஏறியபோது நேர்ந்த துயரம்!

 

நாமக்கல் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் மேட்டு தெருவில் வசித்து வருபவர் ரவி. கூலித் தொழிலாளியான இவருக்கு இனியவன் (15) என்ற மகன் இருந்தார். இவர், பொம்மைகுட்டை மேட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று, (செப். 13) மாலை இனியவன் தனது நண்பர்களுடன் சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கால்பந்து விளையாட சென்றுள்ளார். 

அப்போது, பந்து அருகில் உள்ள பள்ளி கட்டிடத்தின் மீது விழுந்துள்ளது. அதை எடுப்பதற்காக இனியவன் அருகில் இருந்த சத்துணவு கூட கட்டிடத்தில் ஏறிய போது, கை தவறி கட்டிடம் அருகே சென்று கொண்டிருந்த மின்சார கம்பியின் மீது கை வைத்துள்ளார். இதில்  தூக்கி வீசப்பட்ட இனியவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு விளையாடி கொண்டிருந்த நண்பர்கள் இனியவனை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியிலே இனியவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர் கூறியதையடுத்து இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேந்தமங்கலம் போலீசார் மாணவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.