கல்லூரி வாசலில் மாணவி கொடூர கொலை.. குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கிய நீதிமன்றம்.!

 

சென்னையில் கல்லூரி வாசலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்தவருக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி அஸ்வினி. இவர் கே.கே.நகர் மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அழகேசன் என்பவர் அவரை ஒருதலையாக காதலித்து வந்தது மட்டுமல்லாமல் தொல்லை கொடுத்துள்ளார். நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரிக்கவே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில்  போலீசார் அழகேசனை  கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அழகேசன் அஸ்வினி மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கல்லூரி வாசலில் வைத்து அஸ்வினியை கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை செய்தார்.

பின்னர் அஸ்வினியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்ற அழகேசனை தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது ஃபாரூக் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையில் அழகேசன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும்,  ரூ.10,500 அபராதம் விதிக்கப்பட்டது.