இரவில் வீடுகள் மீது கல்வீச்சு.. கதிகலங்க வைக்கும் குட்டிச்சாத்தான்.. திருப்பூர் அருகே திக் திக்

 

காங்கேயம் அருகே வீட்டின் மேல் கற்கள் விழுவதால் குட்டிச்சாத்தான் வீசுவதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஒட்டப்பாளையம் கிராமத்தில் 60 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக இரவு 7 மணி முதல் இரவு 1 மணி வரை வீடுகளின் மேல் பகுதியில் கற்கள் விழுந்து வந்ததாக தெரிகிறது. ஒவ்வொரு வீடாக கற்கள் விழ ஆரம்பித்ததால் 9 வீடுகளில் ஓடுகள் உடைந்து சேதமடைந்தது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குட்டிச்சாத்தான் கற்களை வீசுவதாக அச்சமடைந்தனர்.

இதனால் அந்த பகுதியில் உள்ள கோவிலில் தங்கி சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தூக்கத்தை தொலைத்துவிட்டு கற்களை யார் வீசியது என தேடியும் யாரும் சிக்கவில்லை. இது குறித்து படியூர் ஊராட்சி மற்றும் காங்கேயம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின் பேரில் ஊராட்சி தலைவர், காங்கேயம் போலீசார் சம்பவ இடத்தில் உள்ளனர். ஆனாலும் கற்கள் வந்து விழுகிறது, அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிறார்கள். இரவு மட்டுமல்லாமல் பகலிலும் வீடுகள் மீது கற்கள் விழுந்ததாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். இதையடுத்து மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் கிராமத்தின் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

20 போகஸ் லைட்டுகள் வைக்கப்பட்டு கிரேன்கள மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது. இதுகுறித்து மக்கள் கூறுகையில் எத்தனை நாளைக்குத்தான் கல்லடி வாங்குவது, வேறு ஊருக்கு சென்றுவிடலாம் போலிருக்கிறது. 15 நாட்களுக்கு மேலாக நாங்களும் தூக்கத்தை தொலைத்து யார் கல் வீசுகிறார்கள் என பார்த்தோம். ஆனால் எதுவும் தெரியவில்லை.

இனியாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நேரங்களிலும் டிரோன் கேமரா மூலமும் கிராமத்தை கண்காணித்து வருகிறார்கள். அவ்வாறு கண்காணித்தும் கற்கள் விழுகின்றன. அந்த கல் எங்கிருந்து விழுகிறது என தெரியவில்லை. கல் வீசுவது மனுஷனா இல்லை குட்டிச் சாத்தானா என தெரியவில்லை. போலீஸார் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். விரைந்து கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும் என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.