ஆன்மிக அரசு.. இந்து சமய அறநிலையத்துறையின் திட்டங்களை அடுக்கிய அமைச்சர் சேகர் பாபு!!
பக்தர்களுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்தி திராவிட மாடல் அரசு ஆன்மிக அரசாக திகழ்ந்து வருகிறது என்பதால் தான் நான்கு முனைகளிலிருந்து இந்த அரசின்மீது தாக்குதல்கள் செலுத்தப்படுகின்றன என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
சென்னை, கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோயிலில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தில் பங்கேற்கும் 200 மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை வழங்கி, ஆன்மிகப் பயணப் பேருந்துகளை கொடியசைத்து அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளார்களைச் சந்தித்த அமைச்சர், “
முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட மூத்தக்குடிமக்கள் பயன்பெறும் வகையில் அறுபடைவீடுகளுக்கு ஆன்மிகப் பயணமாக நான்கு நாட்கள் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்தில் கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லப்பட்டு சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்படுகிறது. கடந்தாண்டு இத்திட்டத்தில் 2015 பக்தர்கள் பயன்பெற்றனர். இந்தாண்டு ரூ.2.50 கோடி அரசு நிதியில் 2,000 பக்தர்கள் அறுபடைவீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்த அரசு பொறுப்பேற்றபின், 3,412 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதத்திற்குள் 4,000 திருகோயில்களை எட்டி வரலாற்று சாதனை படைக்கும்ந்த அரசு பொறுப்பேற்றபின், 3,412 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதத்திற்குள் 4,000 திருகோயில்களை எட்டி வரலாற்று சாதனை படைக்கும்.
மருதமலையில் ரூ.110 கோடியில் 204 அடி உயரத்திலும், ஈரோடு மாவட்டம் திண்டலில் ரூ.30 கோடியில் 207 அடி உயரத்திலும், இராணிப்பேட்டை மாவட்டம், குமரகிரியில் ரூ.6.83 கோடியில் 114 அடி உயரத்திலும் முருகன் சிலைகள் நிறுவப்பட உள்ளது. இதுவரை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட 131 முருகன் திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது
அறுபடை வீடுகள் மற்றும் அறுபடை வீடு அல்லாத முருகன் கோயில்களுக்கு ரூ.1,085.63 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இராமேசுவரம் – காசி ஆன்மிகப் பயணத்தை முதன்முதலில் தொடங்கியதோடு, இதுவரை ரூ. 2.30 கோடி அரசு நிதியில் 920 பக்தர்களும், ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு ரூ.75 இலட்சம் அரசு நிதியில் 3004 பக்தர்களும், புரட்டாசி மாதத்தில் பெருமாள் திருக்கோயில்களுக்கு ரூ.25 இலட்சம் அரசு நிதியில் 1014 பக்தர்களும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆன்மிகத் தலங்களுக்கு சென்று வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை உயர்த்தி தந்த அரசு இந்த அரசாகும். முதலமைச்சர் எண்ணத்தில் உதித்திட்ட இப்படிப்பட்ட புதிய திட்டங்களை செயல்படுத்தி திராவிட மாடல் அரசு ஆன்மிக அரசாக திகழ்ந்து வருகிறது. இதனால்தான் நான்கு முனைகளிலிருந்து இந்த அரசின்மீது தாக்குதல்கள் செலுத்தப்படுகின்றன