பெற்றோருக்கு மகன் அனுப்பிய ஆடியோ.. ரயில் முன் பாயந்து தற்கொலை.. ஆன்லைன் ரம்மியால் தொடரும் சோகம்

 

உளுந்தூர்பேட்டை அருகே ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். 27 வயதான இவர், டிப்ளமோ படித்து முடித்து வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். வீட்டில் இருந்தப்படியே பணத்தை சம்பாதிக்க ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் சிறுகசிறுக பணத்தை வைத்து ரம்மியில் விளையாடிய ஜெயராமனுக்கு லேசான வருமானம் கிடைத்தது. அதனால் ஆசை தொற்றிக்கொண்டதால், கடன் வாங்கி சூதாடியுள்ளார். ஆனால் அவர் நினைத்ததைப் போல பணம் எடுக்க முடியவில்லை. மாறாக, சிறுகசிறுக என லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார்.

பல லட்ச ரூபாய் கடன் வாங்கி ரம்மி விளையாடியவர், மொத்த பணத்தையும் பறிகொடுத்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்கவும், புதிதாக பணம் கொடுக்க ஆள் இல்லாததாலும், தன்னால் பணம் சம்பாதிக்க முடியாததாலும் ஜெயராமன் விரக்தியில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்து தற்கொலை முடிவுக்கு வந்த அவர், உருக்கமாகப் பேசி தனது பெற்றோருக்கு ஆடியோ அனுப்பி வைத்தார்.

ஆடியோவை கேட்டு ஜெயராமனை காப்பாற்றுவதற்குள் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தண்டவாளத்தில் இருந்து ஜெயராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிது செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.