சாலை விபத்தில் உயிரிழந்த தந்தையின் உருவத்தை மெழுகு சிலையில் வடிவமைத்த மகன்.. நெகிழ்ச்சி வீடியோ!

 

உளுந்தூர்பேட்டை அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தனது தந்தையின் உருவத்தை மெழுகு சிலையாக வடிவமைத்து தனது திருமணத்தில் பங்கேற்க வைத்த பாச மகனின் செயல் பார்ப்போரை‌ நெகிழச் செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரும்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசு. இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அன்பரசனின் தந்தை சங்கர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், அன்பரசனுக்கும் சோழபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தனக்காக சிறு வயது முதல் உழைத்து வந்த தனது தந்தை தனது திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று காவலர் அன்பரசன் எண்ணினார்.

இதற்காக அவரது தந்தையை மெழுகு சிலையாக தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். பின்னர், தனது திருமணத்தில் அனைத்து விதமான நிகழ்வுகளிலும் தனது தந்தையை பங்கேற்க செய்தது உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.