வாய்க்காலில் தவறி விழுந்து வளர்ப்பு மகன் பலி.. கரூர் அருகே சோகம்!

 
Karur

கரூர் அருகே பாசன வாய்க்காலில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூர் தென்கரை வாய்க்கால் கரையோரம் தண்ணீர் பாலம் அருகே வசித்து வருபவர் கணபதி (28). இவரது மனைவி சித்ரா (26). இந்த தம்பதியினரின் மகள் நாய்க்கடித்து உயிரிழந்த நிலையில், கிஷாந்த் என்ற ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். ஒன்றரை வயதாகும் கிஷாந்துக்கு, தாய் சித்ரா இன்று (நவ.20) காலை உணவு ஊட்டி விட்டுள்ளார். அதன் பிறகு வீட்டினுள் சென்று வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். 

baby

அரை மணி நேரத்திற்கு பிறகு வீட்டினுள் மகன் கிஷாந்தை காணாமல் தேடியுள்ளார். அக்கம் பக்கம் வீடுகளில் தேடியும் சிறுவன் இல்லாததால், பதற்றம் அடைந்தவர்கள் வாய்க்காலில் சிறுவன் தவறி விழுந்திருக்கலாம் என்பதால் மாயனூர் கதவணை நிர்வாக அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். தண்ணீர் வெளியேற்றத்தை கட்டுப்படுத்திய பிறகு வாய்க்காலில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தேடி சிறுவனின் உடலை அப்பகுதி மீனவர்களும், பொதுமக்களும் மீட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாயனூர் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமைனக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனரெ.