திருடப்போன வீட்டில் மது போதையில் உறக்கம்... போலீசில் வசமாய் சிக்கிய திருடன்!! 

 

அடையாறு கஸ்தூரிபாய் நகரில் திருடப்போன வீட்டில் மதுபோதையில் திருடன் அயர்ந்து தூங்கிய திருடனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் மூன்றாவது பிரதான சாலை பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திக் நரேன். தனியார் நிறுவன ஊழியர். இவரது பெற்றோர் இதே அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருகின்றனர். கார்த்திக் நரேனின் தந்தை ரங்கநாத் தாயாரும் காசிக்கு சென்றிருந்தனர். 

நேற்று முன்தினம் இரவு அவர்கள் காசியில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு திரும்பினர். இதனால் கார்த்திக் நரேன் பெற்றோரின் வீட்டை திறந்து வைத்துவிட்டு மாடியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலையில் ரங்கநாத்தும் அவரது மனைவியும் வீட்டுக்கு வந்தனர். அப்போது படுக்கை அறையில் அவர்கள் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுக்கை அறையில் வாலிபர் ஒருவர் நன்றாக குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தார். 

இதுகுறித்து அறிந்ததும் அக்கம் பக்கத்தினரும் திரண்டனர். அவர்கள் வாலிபரை தட்டி எழுப்பினர். அப்போது அவர் மது போதையில் காணப்பட்டார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அவர் தப்பி இன்னொரு வீட்டுக்குள் பதுங்கினார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடையாறு போலீசார் விரைந்து சென்று போதை கொள்ளையனை மடக்கி பிடித்தனர். போலீஸ் விசாரணையில் அவர் வீட்டில் கொள்ளையடித்து விட்டு பின்னர் போதையில் மயங்கி தூங்கிவிட்டது தெரிய வந்தது. கொள்ளையனிடமிருந்து ரூபாய் ஆயிரம் பணம், 20 யூரோ கரன்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து வாலிபரை கைது செய்த போலீசார் அவரை அடையாறு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணைக்கு நடத்தினர். அவரது பெயர் ஏழுமலை திருவண்ணாமலை மாவட்டம் கவுந்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. வில்லிவாக்கம் ஜி.கே.எம்.காலனியில் தங்கி இருந்து கட்டுமான பணிகளில் அவர் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மது போதையில் திருடச் சென்றபோது பிரிஜில் இருந்த சாக்லேட்டுகளை எடுத்து ஏழுமலை சாப்பிட்டுள்ளார். இதில்தான் அவருக்கு போதை அதிகமாகி அங்கேயே படுத்து தூங்கியதும் தெரியவந்தது. கைதான ஏழுமலையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.