ஒப்புதல் அளித்த ஆளுநர் ரவி.. TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்!
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புகள் டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தின் மூலம் விஏஓ முதல் வட்டாட்சியர் வரை அனைத்து விதமான பணிகளுக்கும் தேர்வு செய்யப்படுகிறார்கள். குரூப் 1, குரூப் 2 , குரூப் 4, விஏஓ, குரூப் 3 என தொடங்கி குரூப் 8 வரை பல்வேறு பதவிகளுக்கு தமிழ்நாட்டில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர் போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வு, முதல் கட்ட தேர்வு, பிரதான தேர்வு என அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப தேர்வு எழுத வேண்டும். சில பதவிகளுக்கு நேர்காணலே இல்லாமலும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளை கவனிக்க ஐஏஎஸ் அதிகாரி டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்படுகிறார்.
இந்த டிஎன்பிஎஸ்சி ஆணையமானது ஒரு தலைவரையும் 13 உறுப்பினர்களையும் கொண்டது. இதில் தலைவர் பதவி நிரப்பப்படாமல் நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த டிஎன்பிஎஸ்சியின் தலைவராக 2020-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த பாலச்சந்திரனின் பதவிக் காலம் 2022-ம் ஆண்டுடன் முடிவடைந்தது. இதையடுத்து பொறுப்பு தலைவராக முனியநாதன் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வருவாய் நிர்வாக ஆணையராக பணிபுரிந்து வந்தார். தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்ட எஸ்.கே.பிரபாகர், பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவியில் இருப்பார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு தமிழ்நாடு டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவியோ அந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அனுப்பாமல் திருப்பி அனுப்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.