ஆங்கிலம் கற்க முடியாதவர்களுக்காக நாங்கள் இந்தி கற்க வேண்டுமா? அமைச்சர் பி.டி.ஆர். பளிச்!!

 

இந்தி பேசும் மாநிலங்கள் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளாததற்காக நாங்கள் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டுமா? என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். பழைய கேள்வி பதில் வீடியோ ஒன்றை வெளியிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,

”தமிழ்நாட்டின் உயிர் பிரச்சனையாம் மொழித் திணிப்பிற்கும், உரிமை பிரச்சனையாம் தொகுதி மறுசீரமைப்பிற்கும் எதிரான உரிமைக் குரல் எழுப்புவதற்கான களமாக  தமது பிறந்தநாளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட நமது தாய்மொழி காக்கும் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின்  அவர்களின் கட்டளைக்கிணங்க, கடந்த 2023ஆம் ஆண்டு, கேரளாவில் நடந்த MBIFL நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சசி தரூர் அவர்கள் எழுப்பிய மும்மொழி கொள்கை குறித்த தமிழ்நாட்டின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கு பகிர்கிறேன்

மும்மொழிக் கொள்கையை நிர்ப்பந்திப்பதன் மூலம் ஒன்றிய அரசு இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலத்தைக் கற்பிக்காமல், இந்தி என்கிற ஒரு மொழிக் கொள்கையைப் பின்பற்றச் செய்துவிட்டு, இந்தி பேசாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மட்டும் மும்மொழி கொள்கையைத் திணிக்கிறது. ஆங்கிலம் கற்க முடியாதவர்களுக்காக நாங்கள் இந்தி கற்க வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.