ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்கள் கடையடைப்பு.. விக்கிரமராஜா எச்சரிக்கை!!
ஈரோடு வியாபாரிகளிடம், அரசாணையை மீறி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்தாவிட்டால் மாவட்டம் முழுவதும் 2 நாள் கடையடைப்பு செய்யப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா எச்சரித்துள்ளார்.
இது குறித்து ஈரோட்டில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த விக்கிரமராஜா கூறியதாவது,
“ஈரோடு காய்கறி, பழ மார்க்கெட்டில் நிரந்தர கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடம், அரசாணையை மீறி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்க கட்டணத்துக்கு ரசீது வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால், ஈரோடு மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.
மேலும், ஆன்லைன் வர்த்தகத்தால், தமிழகத்தில் உள்ள வணிகர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளைச் சேர்ந்த கூட்டாண்மை நிறுவனங்கள் தமிழகத்தில் கால் பதிக்க முயற்சிக்கின்றன. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து முறையிட உள்ளோம்.
தமிழ்நாடு வணிகர் சங்க மாநில செயற்குழு கூட்டம் ஜூலை மாதம் 22-ம் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக தமிழகம், கேரளா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, லட்சத்தீவு உள்பட 7 மாநில வணிக அமைப்புகள் பங்கு பெறும் தென் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் வணிகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.