அதிர்ச்சி.. புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை.. காரணம் என்ன?
சென்னை புழல் சிறையில் நகை திருட்டு வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்த பெண் கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த புழல் மகளிர் சிறையில் 100-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி என பல்வேறு வழக்குகளில் விசாரணைக் கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், பல்வேறு கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்ட திருப்பூரைச் சேர்ந்த மீனாட்சி என்கிற காந்திமதி (50), மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், சிறையில் உள்ள கழிவறையில் காந்திமதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக கைதிகள் இதுகுறித்து தகவல் அளித்தனர். தகவலின் பேரில், சிறைத் துறையினர் காந்திமதியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.
அப்போது, அங்கு காந்திமதியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர்.
இலவச சட்ட உதவி மையம் மூலம் ஜாமின் கிடைத்தும் உறவினர்கள் யாரும் உறுதி பத்திர எழுதி தர வராததால், மனமுடைந்த காந்திமதி தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளன. பெண் கைதி தற்கொலை குறித்து புழல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தற்கொலை செய்து கொண்ட பெண் கைதி காந்திமதி மீது, கடந்த 2014-ம் ஆண்டு வேளச்சேரியில், தான் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர் லட்சுமிதேவியை கட்டிப் போட்டு, 12 சவரன் நகை மற்றும் 45 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த வழக்கு என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.