அதிர்ச்சி.. மண்ணில் புதைந்த அடுக்குமாடி கட்டடம்.. ஊழியர்கள் சிக்கியதால் பரபரப்பு!

 

வேளச்சேரி அருகே மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக திடீரென்று ஏற்பட்ட பள்ளத்தில் அடுக்குமாடி கட்டடம் தரையில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் சென்னை ரேஸ்கோர்ஸ் சாலை அருகே கிண்டி 5 பர்லாங்க் ரோட்டில் கேஸ் நிரப்பும் நிலையம் உள்ளது. இந்த நிலையத்துக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. ஊழியர்கள் தங்கும் வகையில் இந்த கட்டடம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் இன்று காலையில் கனமழை தொடர்ந்து பெய்த நிலையில் திடீரென்று அந்த கட்டடம் தரையில் இறங்கியது. இதனால் கட்டடம் மண்ணுக்குள் சென்றது.

இந்த கட்டத்தில் கேஸ் நிலைய ஊழியர்கள் இரவு பணியை முடித்து தங்கியிருந்தனர். முதலில் 10 பேர் இருந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் 3 ஊழியர்கள் மட்டுமே அந்த கட்டத்துக்குள் சிக்கினர். இதில் 2 பேர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மீட்பு பணியில் கிண்டி, வேளச்சேரி தீயணைப்பு வீரர்கள், கிண்டி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே கட்டடம் மண்ணில் புதைந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.