ப்ளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைவு.. மாணவி தூக்கிட்டு தற்கொலை.. தொடரும் சோகம்!

 

படப்பை அருகே ப்ளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ப்ளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று முன்தினம் வெளியிட்டார். தமிழ்நாட்டில் ப்ளஸ்-2 பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது.

பொதுத்தேர்வில் மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை முருகாத்தம்மன் பேட்டையை சேர்ந்தவர் குமார் (50). இவரது மகள் கீர்த்திகா (17). இவர் படப்பை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-2 அறிவியல் பாடப்பிரிவு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.

இவர் தேர்வில் வெற்றி பெற்று 384 மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெற்றோர் தூங்கி கொண்டிருந்தனர். காலையில் வழக்கம் போல் எழுந்த பெற்றோர் கீர்த்திகா தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிமங்கலம் போலீசார் தூக்கில் தொங்கிய கீர்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதிப்பெண்கள் குறைந்ததால் மாணவி  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.