ஜனவரி 2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

 

திருநெல்வேலியில்  ஜனவரி 2-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 17 மற்றும் 18-ம் தேதிகளில் அதீத கனமழை பெய்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தனர். தாமிரபரணி ஆற்றில் வெள்ளம், குளங்கள் உடைப்பால் பல கிராமங்ளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் இன்னும் சில கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்த வண்ணமே உள்ளது. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து மெல்லமெல்ல சீராகி வருகின்றன. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 9 முதல் 12-ம் வகுப்புகள் வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மழை வெள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள 9 பள்ளிகள் திறக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே நெல்லை மாவட்டத்தில் இன்று காலை ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அந்தந்த இடங்களில் நிலவும் சூழலுக்கு ஏற்ப பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் திறக்க வேண்டாம் என நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “நெல்லை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் திறக்க வேண்டாம். பிரைமரி மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து விதமான பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி வற்புறுத்தினால கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளுக்கு வரச் சொல்லியோ, சிறப்பு வகுப்புகள் சொல்லியோ மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பக்கூடாது” குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், இன்று 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த பகுதியில் உள்ள சூழலைப் பொறுத்து பள்ளிகள் திறந்து கொள்ளலாம் எனவும், தேவைப்பட்டால் தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அளிக்கலாம் என்றும் கூறியிருந்தனர். இதனால் நெல்லை மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகினர்.  

மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததே இந்த குழப்பத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இதையடுத்து இறுதியாக நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி 1-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது எனவும், ஜனவரி 2-ம் தேதிக்கு பிறகே அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்றும், ஜனவரி 1-ம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறுகையில், “டெய்லர் சட்டப்படி 9 முதல் 12-ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதேசமயம் அந்தந்த பகுதிகளின் சுழலைப் பொறுத்து மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் எடுக்கும் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது. நேற்றிரவு பல இடங்களில் மழை பெய்தது. எனவே இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலங்களில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விரும்பினால் சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம்.

குறிப்பாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கி வருகிறது என்பதால் பல பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களே சிறப்பு வகுப்புகள் நடத்த விருப்பம் தெரிவிக்கின்றனர். எனவே அது போன்று பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. மற்றபடி ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் கிடையாது” என தெரிவித்தார்.