புயல் தாக்கிய சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகள் திறப்பு!

 

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் நாளை (டிச. 11) முதல் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. 36 மணி நேரம் இடைவிடாது கொட்டிய கனமழையால் 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை நின்று சுமார் ஐந்து நாள்களாகியும் பல இடங்களில் இன்னும் வெள்ளநீர் வடியவில்லை. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நாளை (டிச.11) முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் முறிந்து விழுந்த மரங்களும், மரக்கிளைகளும் அகற்றப்பட வேண்டும். அனைத்து பொதுகழிப்பறைகளும், சமுதாய கழிப்பறைகளும் சுகாதாரமான நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தெருவிளக்குகள் சரியாக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று மேலாண்மை தொடர்பாக, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்து ஒருங்கிணைத்தல், குடிநீர் விநியோக நிலையங்கள் மற்றும் கழிவுநீரகற்று நிலையங்களைக் கணக்கெடுத்து, அவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்துடன் இணைந்து செயல்படுவதுடன், கூடுதல் பணியாக கழிவுநீர் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கும் ஜெட் ரோடிங் இயந்திரங்கள், அதிக திறன் கொண்ட உறிஞ்சி இயந்திரங்கள் மற்றும் கழிவுநீரகற்றும் கொள்கலன் ஊர்திகளை ஏனைய இடங்களிலிருந்து வரவழைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரியவாறு பயன்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளது.