வரும் 27-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 

ஹெத்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 27-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் பெரும்பான்மையாக வாழந்து வரும் படுகர் இன மக்கள் மூதாதையான ஹெத்தையம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஹெத்தையம்மனின் மூல ஆலயம் கோத்தகிரி அருகில் உள்ள பேரணி கிராமத்தில் அமைந்துள்ளது. இது தவிர ஏராளமான படுகர் கிராமங்களிலும் ஹெத்தையம்மன் கோவில் உள்ளன.

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஹெத்தையம்மன் திருவிழா மிகவும் படுகர் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பல நாள்கள் விரதமிருந்த பக்தர்கள் வெள்ளை நிற உடையணிந்து ஹெத்தையம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஹெத்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 27ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை டிசம்பா் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 6-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.