வரும் 21-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 

நெல்லையப்பர் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 21-ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆனித் தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோவிலில் இந்த ஆண்டு ஆனித் திருவிழா தேரோட்டம் வருகிற 21-ம் தேதி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வருகிற 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “நெல்லை டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவில் ஆனி தேர் திருவிழா வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருப்பின் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.

மேற்படி 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத்தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறி சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.

மேலும், இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு கோப்புகள் தொடர்பாக அவசர பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.