திருவான்மியூர் அருகே துப்புரவு பணியாளர் தலை நசுங்கி பலி.. கதறி அழுத சக பணியாளர்கள்!!

 

திருவான்மியூர் அருகே அதிகாலை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தூய்மைப் பணியாளர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகாமி (45). இவர் சென்னை மாநகராட்சியில் 180வது வார்டில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இன்று அதிகாலை சிவகாமி திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சிக்னல் அருகே தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பின்னர் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக சிவகாமி சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்தபோது திருவான்மியூரில் இருந்து கிழக்கு கடற்கரை பிரதான சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று மோதி சாலை நடுவே விழுந்தார்.

அப்போது நீலாங்கரை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி ஒன்று சிவகாமி தலை மீது ஏறி இறங்கி நிற்காமல் சென்றது. இதில் சிவகாமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸார் சிவகாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து முகலிவாக்கத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் அஸ்வந்த் (25) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.