ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6,000 நிவராணம்..  வங்கி கணக்கில் வரவு வைப்பு

 

மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ.6,000 உதவித் தொகையைப் பெற விண்ணப்பித்த ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் முழுமையாகவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பகுதியாகவும் மிக்ஜம் புயல் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. கனமழையால் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொருட்கள் கடுமையாகச் சேதம் அடைந்தன.

இதையடுத்து, புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணமாக ரூ.6 ஆயிரம் அளிக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, டோக்கன்கள் அடிப்படையில் வீடுகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது. புயல் நிவாரணம் கிடைக்கப் பெறாதவர்கள், மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்பட்டன. விண்ணப்பங்களை குடும்ப அட்டைதாரர்கள் பூர்த்தி செய்து அளித்தனர்.

அதுபோல, ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. இந்த விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் அனைத்தும் பிரத்யேக கைப்பேசி செயலியில் பதிவிடப்பட்டு, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் வீடுகள் முன்பாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டு பயனாளிகளின் இருப்பிடமும் உறுதி செய்யப்பட்டு வந்தது.

விண்ணப்பங்கள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.6,000 வரவு வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விவரங்கள் பயனாளிகளின் கைப்பேசி வழியே தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.