ரூ.5 ஆயிரம் கோடி மோசடி.. நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர் நீதிமன்றத்தில் சரண்!
ரூ.5 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் நியோமேக்ஸ் இயக்குநர் மதுரை நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார்.
மதுரை மாவட்டம் எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் கீழ் ஏராளமான துணை நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் இயங்கின. இதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜக பிரமுகரான வீரசக்தி உள்ளிட்டோர் செயல்பட்டனர்.
தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடு வசூலித்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்கு முதிர்வுத் தொகையை தராமல் ஏமாற்றினர். இதுகுறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். பலரும் தலைமறைவாக உள்ளனர்.
இவர்களில் போலீசாரால் தேடப்பட்ட நியோமேக்ஸ் துணை நிறுவனத்தின் இயக்குனரான நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (47) என்பவர் மதுரையிலுள்ள பொருளாதார முதலீட்டு குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நேற்று சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி கே.ஆர்.ஜோதி உத்தரவிட்டார்.