ரூ.1,000 பணம் வங்கி கணக்கில் வந்துவிட்டது... கொண்டாட்டத்தில் இல்லத்தரசிகள்!!

 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கும் பணி தொடங்கி உள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அண்ணா பிறந்தநாளான நாளை (செப். 15) தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்று தொடங்கி வைக்க உள்ளார். நாளையே ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து விடும்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் இத்திட்டத்தில் இணைய 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்திருத்தனர். அவா்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவா்களாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட 57 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கும் பணி தொடங்கி உள்ளது. நாளை இந்த திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், முன்னதாக தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் வகையில் சீரற்ற முறையில் (Random) சில விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ஒரு ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சோதனை வெற்றி பெற்றி நிலையில் அடுத்த கட்டமாக சீரற்ற முறையில் சில விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. நாளை திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட பிறகு இந்த பணி முழுமையாக நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் பெண்களுக்கு பிரத்யேக ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.