ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை.. போதையில் இருந்த வாலிபரை தண்ணீர் தெளித்து எழுப்பியதால் விபரீதம்!

 

தாம்பரம் அருகே மதுபோதையில் இருந்த வாலிபரை முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிய ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்துள்ள சேலையூர் ராஜா அய்யர் தெருவில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி (69). ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி ஜெயசாண்டீஸ்வரி. சம்பவத்தன்று இரவு கிருஷ்ணமூர்த்தி வீட்டின் அருகே உள்ள சாலையில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் படுத்து கிடந்தார். இதனை பார்த்த கிருஷ்ணமூர்த்தி, போதையில் இருந்த வாலிபரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த போதை வாலிபர், கிருஷ்ணமூர்த்தியை தாக்கி கீழே தள்ளினார். அப்போது கீழே இருந்த கல்லில் தலை மோதியதில், தலையின் பின்புறத்தில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கினார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரை தாக்கிய போதை வாலிபரை விரட்டிப்பிடித்து தர்ம அடி கொடுத்து சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், திருவண்ணாமலை மாவட்டம் அப்புபட்டு கிராமத்தை சேர்ந்த சிவராமன் (29) என்பதும், சென்னையில் கார் டிரைவராக வேலை செய்து வருவதும், குடிபோதையில் தூக்கத்தில் இருந்த தன்னை தண்ணீர் தெளித்து எழுப்பியதால் ஆத்திரத்தில் கிருஷ்ணமூர்த்தியை தள்ளிவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சிவராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குரோம்பேட்டையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணமூர்த்தியை மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சேலையூர் போலீசார் சிவராமன் மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை செய்து வருகின்றனர்.