ப்ளஸ்-2 மறுகூட்டல் முடிவுகள் வெளியீடு.. பார்ப்பது எப்படி?

 

12-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மறுகூட்டல், மறுமதிப்பீட்டு முடிவுகள் இன்று பிற்பகலில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7.5 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மேலும் 47,934 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை.

இந்த நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவ மாணவிகளுக்கு அண்மையில் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த துணைத் தேர்வுகளை 30 ஆயிரம் மாணவர்கள் எழுதி உள்ளனர். இதற்கான முடிவுகள் வெளிவந்த நிலையில், மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் அண்மையில் ஆன்லைனில் விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது.

அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.inல் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பட்டியலில், இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாளில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.