பத்திரப் பதிவும் திடீர் திமுக பாசமும்? பாஜகவுக்கு கல்தா கொடுக்கிறாரா அண்ணாமலை?

 

80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மிகவும் குறைந்த விலைக்கு பத்திரப் பதிவு செய்துள்ளார் அண்ணாமலை என்று பாஜகவின் தீவிர ஆதரவாளரான மாரிதாஸ் பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பினார். பத்திரப்பதிவு அதிகாரி அண்ணாமலை வீட்டிற்கே சென்று இந்த பத்திரப் பதிவை செய்ததாகவும் கூறப்பட்டது.இதற்கிடையே கோவையில் பிரபல ஆங்கில ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் திமுக அரசுக்கு எதிரான மன நிலை மக்களிடம் இல்லை. 40 சதவீத வாக்குகள் திமுக அணிக்கு இருக்கிறது என்றும் பேசியிருந்தார் அண்ணாமலை.

குறைந்த விலைக்கு பதிவு செய்யப்பட்டதால், அண்ணாமலையின் பத்திரப்பதிவால் தமிழ்நாடு அரசுக்கு சுமார் ஒன்பது கோடி ரூபாய் இழப்பு என்று ஊடகங்களில் பேசப்பட்டது. தற்போது அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு செங்கோட்டையன் தலைமையில் புதிதாக ஒரு அணி உருவாகுவதற்கு அண்ணாமலையின் பங்கும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியால் தமிழ்நாடு பாஜக தலைவர் பறிக்கப்பட்ட பிறகு அண்ணாமலைக்கு எந்த ஒரு பொறுப்பையும் பாஜக இன்னும் வழங்கவில்லை. இந்த சூழலை திமுக சரியாகப் பயன்படுத்திக் கொண்டது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

சொத்து பத்திரப் பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்துள்ள அண்ணாமலை அது அவரும் மனைவியும் சேர்த்து வைத்த சேமிப்பிலிருந்து வாங்கப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும் தொழில் தொடங்க ஒன்றிய அரசு திட்டத்தில் கடனுக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து நீண்டதொரு விளக்கத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

துணைக் குடியரசுத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அண்ணாமலை செல்ல வில்லை. முன்னதாக அமித்ஷா வீட்டில் நடந்த உயர்மட்டக் குழு கூட்டத்தையும் புறக்கணித்து விட்டு திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பாஜக எந்த ஒரு பொறுப்பையும் தராத நிலையில், அரசியலிலிருந்து சற்று விலகியிருந்து அதிமுக- பாஜக அணியின் தோல்விக்காக பின்னணியில் செயல்படப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போதைய அரசியல் சூழ்நிலை தனக்கு சாதகமாக இல்லாத நிலையில் பதுங்கி இருந்து பாயத் திட்டமிட்டுள்ளாரா அண்ணாமலை?

-ஸ்கார்ப்பியன்