7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. வானிலை மையம் வார்னிங்!

 

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து பல பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் இன்று மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது இந்த 7 மாவட்டங்களில் இன்று 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும், 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாளை (மே 17) தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.