ரேஷன் கடைகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை..  தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வரும் சனிக்கிழமை (ஜூலை 20) விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அத்துடன் பண்டிகை காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரண பொருட்கள் என அனைத்தும்  ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள 39 மாவட்டங்களில் 248 கிடங்குகள் இருக்கின்றன. இதிலிருந்து 35,296 ரேசன் கடைகளுக்கு பொருட்கள் பிரித்து விநியோகிக்கப்படுகிறது. அதேபோல உணவு பொருட்களுடன் சேர்த்து மண்ணெண்ணெய்யும் விநியோகிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 2.25 கோடி குடும்ப அட்டைகள் இருக்கிறது. இதன் மூலம் சுமார் 7 கோடி பேர் பயனடைகிறார்கள்.

இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு நாளை மறுநாள் பொருட்கள் வாங்க முடியாது. ஏனெனில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வரும் சனிக்கிழமை (ஜூலை 20) விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மகளிா் உரிமைத் தொகைத் திட்டப் பணிகளுக்காக வேலை செய்த நிலையில், அதற்கு ஈடாக விடுமுறை விடப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

ரேஷன் கடைகளில் தற்போது துவரம் பருப்பு, பாமாயில் விநியோகம் முறையாக இல்லை என்ற புகார்கள் உள்ளது. அரிசி, சர்க்கரை போன்றவை தான் சரியாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சமையல் எண்ணெய் மற்றும் துவரம் பருப்பு கேட்டால் மாதக்கடைசியில் வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் கூறி வருகிறார்கள்.

மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ், பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த ஆண்டு மேற்கொண்டனர். இந்தப் பணியை கடந்த ஆண்டு ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் ரேஷன் கடை பணியாளா்கள் மேற்கொண்டனா். இந்த 2 நாள்கள் பணிக் காலத்தை ஈடுசெய்யும் வகையில், ஜூன் 15-ம் தேதி ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதம் 20-ம் தேதி (சனிக்கிழமை) விடுமுறை விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.