ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் காலமானார்.. சொந்த நாடு திரும்ப அனுமதி கிடைத்த நிலையில் சோகம்!
ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இலங்கை தமிழர் சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த அனைவரும் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தனும் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார். தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார் சாந்தன்.
இந்நிலையில், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார்.
கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாச சுழற்சி உள்ளிட்டவை சீராக இருப்பதாகவும், அதேவேளையில் பிற பாதிப்புகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, சாந்தனை இலங்கை நாட்டுக்கு அனுப்ப ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒன்றிய அரசு அனுமதியளித்தது. இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாந்தனின் உடல் நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவல் வெளியானதை அடுத்து சாந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சாந்தன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மருத்துவமனை சிகிச்சைகள் கைகொடுக்காமல் சாந்தன் இன்று காலை 7.50 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.