எக்ஸ் தளத்தில் நீக்கிய பதிவை மீண்டும் வெளியிட்ட ஆளுநர் மாளிகை!

 

இன்று காலை சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார் ஆள்நர் ஆர்.என்.ரவி. ஆளுநர் மாளிகைக்குச் சென்றவுடன் எக்ஸ் தளத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு பதிவு ஒன்று ஆளுநர் மாளிகை பெயரில் வெளியானது. வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே அது நீக்கப்பட்டது. மீண்டும் அதே பதிவு சில மாற்றங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

”இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர்.

அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.” என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.