மீண்டும் சொத்து வரி உயர்வு.. 1-ம் தேதி முதல் அமல்

 

தமிழ்நாட்டில் 2025-2026 ஆம் நிதியாண்டில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணைய பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகளில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரி விகிதத்தை உயர்த்த அறிவுறுத்தியது. அந்த வகையில், தமிழ்நாட்டில் 2022-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. அப்போது, 600 சதுர அடிக்கு குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் உயர்த்தப்பட்டது.

இதேபோல, 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு, 75 சதவீதமும் 1,800 சதுர அடிக்கு மேலாக இருந்தால் 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை, கல்வி நிலைய பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்பட்டது.

இதில், சென்னை மாநகராட்சியில் பிரதான பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான கட்டிடங்களுக்கு 50 சதவீதம், 2011-ம் ஆண்டு சென்னையோடு இணைக்கப்பட்ட பகுதியாக இருந்தால் 25 சதவீதமும் உயர்த்தப்பட்டது. 600 முதல் 1,200 சதுர அடி பரப்பளவு குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுக்கு 100 சதவீதம், 1,801 சதுரடிக்கு மேல் 150 சதவீதம் உயர்த்தப்பட்டது.

உயர்த்தப்பட்ட இந்த சொத்துவரி சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களைப் பொறுத்து வேறுபட்டது. 2025-2026 ஆம் நிதியாண்டில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் நேற்று, செப்டம்பர் மாதத்துக்கான மாதாந்திர மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது. கூட்டத்தில், சென்னை மாநகராட்சியில் 6 சதவீதம் சொத்து வரியை உயர்த்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சொத்து வரி உயர்வு என்பது சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களை பொறுத்து வேறுபட்டு காணப்படும்.

குறிப்பாக, இடம், கட்டிடத்தின் அளவை பொறுத்து மக்களுக்கான சொத்து வரியில் வித்தியாசம் இருக்கும். சென்னை மாநகராட்சியில் 6 மாதத்துக்கு ஒரு முறை சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில், 2025-2026 ஆம் ஆண்டுக்கான சொத்துவரி அடுத்த மாதம் முதல் கணக்கீடு செய்யப்படும். எனவே, இந்த உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வு அக்டோபர் 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.