மதுவிலக்குத் திருத்தச்சட்ட மசோதா அமல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 

தமிழ்நாட்டில் மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா அமல்படுத்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதிகளில் கடந்த 19-ம் தேதி விஷ சாராயம் குடித்த 229 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனைகளிலும், புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர். தற்போது வரை 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக மொத்தம் 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் விஷ சாராய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். மேலும் அவர் இது தொடர்பாக விரிவான விளக்கமும் அளித்தார்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு விஷ சாராயத்தை அறவே ஒழிக்கும் வகையில் 1937-ம் ஆண்டு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. அந்த சட்ட திருத்த மசோதாவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 29-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை வழக்கு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் சிறை தண்டனை மற்றும் அபராத தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை வழங்கவும், ரூ,10 லட்சம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இந்த சட்ட திருத்த மசோதா உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின் சட்டசபையில் நிறைவேறியது. இந்த சட்டம், 2024-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தம்) சட்டம் என அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா உடனடியாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படடது. இந்த சூழலில்  கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கடுமையான தண்டனைகளை விதிப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.