சென்னையில் தனியார் மாநகர பேருந்துக்கள்... அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அளித்த விளக்கம்..!

 

சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதாக வெளியான செய்தி குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். 

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 625 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள், மாநகர போக்குவரத்து கழகம் மூலம் இயக்கிப்பட்டு வருகின்றன. தினசரி சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இதில், பெண்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ், முதியவர்களுக்கான சிறப்பு சலுகை, மற்றும் 30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்யும் பயணச்சீட்டு உள்ளிட்ட திட்டங்களை மாநகர் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில், சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது. அதாவது, கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் எனும் ஒப்பந்த முறையில் அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 

அதன்படி, இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025ம் ஆண்டு 500 பேருந்துகளையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதனை கடுமையாக எதிர்த்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள், நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர்.

இதுதொடர்பாக இன்று விளக்கம் அளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “சென்னையில் தனியார் மாநகரப் பேருந்து இயக்கப்படும் என்பது தவறான புரிதல். 1,000 தனியார் பேருந்துகளை இயக்க அதிமுக ஆட்சியில் உலக வங்கி பரிந்துரைத்தது. தனியார் பேருந்துகளை இயக்கலாமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆலோசகரை தேர்வு செய்யவே டெண்டர். தனியாரிடம் பேருந்து வாங்கி அரசுத் தடத்தில் இயக்கவே திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பான நடைமுறைக்கு அரசாணை வெளியிட்டது அதிமுக ஆட்சிதான் என்றும், இதேபோன்ற நடைமுறையை கேரள அரசு பின்பற்றுவதாகவும் தெரிவித்த அமைச்சர் சிவசங்கர், “மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் தமிழ்நாட்டில் போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. போராட்டங்கள் நடத்தி வரும் சங்கங்கள் உண்மையை புரிந்து போராட்டத்தை கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.